சென்னை, ஆக.17: ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடு பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் குமார் (38). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த 12 வருடங்களாக திருமுல்லைவாயல் ரயில் நிலையம் அருகே உள்ள பிருந்தாவனம் நகரில், ஜோதி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, இவர் கடையில் தனியாக இருந்தபோது, அங்கு பைக்கில் வந்த 4 பேர், கடைக்குள் புகுந்து, ரமேஷ் குமாரிடம் நகை, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் தர மறுத்து கூச்சலிட்டதால், அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர், கத்தியால் வெட்டியதில், ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதையடுத்து, கடையில் வைத்திருந்த 25 சவரன் நகைகள் மற்றும் கல்லாவில் வைத்திருந்த ₹50 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பினர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரமேஷ்குமாரை மீட்டு, அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.