நாகப்பட்டினம், மே 29: நாகையில் பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலை உள்ளிட்ட பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் திட்டத்தில் மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்டத்துடன் இணைந்து செயல்படுத்த அனுபவம் வாய்ந்த நிறுவனம், அமைப்புகள் கலந்து கொள்ளலாம் என்று கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். நாகை மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாவட்ட கல்வி தன்முனைப்புத் திட்டம் இணைந்து அரசு பள்ளி மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், ஒரு ஆண்டு காலத்துக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இந்த முயற்சி மூலம் மாணவர்கள் பாடப்பயிற்சிக்கு அப்பாற்பட்ட, தங்களது ஆர்வங்கள் மற்றும் திறன்களை அடையாளம் காணும் வாய்ப்பு பெறுவார்கள். இந்த திட்டம் அவர்களின் தன்னம்பிக்கை, எதிர்காலத் திட்டமிடல் திறன் மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்டத்துடன் இணைந்து செயல்படுத்த அனுபவம் வாய்ந்த நிறுவனம் அல்லது அமைப்புகள் கலந்து கொள்ளலாம். சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்பு கலைகள், பாடல் (தனிநபர் அல்லது குழு பாடல்), ஓவியம் மற்றும் வண்ணக் கலை, கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், கும்மி, பொய் கால் குதிரை போன்ற நாட்டுப்புற நடனங்கள், பானை வனைதல், களிமண் சிற்பக் கலை, ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் போன்ற தடகள செயல்பாடுகள், பறை, மேளம் போன்ற பாரம்பரிய இசை கருவிகள் வாசித்தல், கவிதை எழுதுதல் போன்ற திறன்களில் ஆர்வம் உள்ள பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தகுதிவாய்ந்த நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள ஆர்வமாக உள்ள நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் 7871925524 என்ற வாட்சப் எண்ணிற்கு தங்கள் நிறுவனத்தின் பெயர், தொடர்பு எண், மாணவர்களுக்கு கற்பிக்க விரும்பும் திறன் மற்றும் ஊர், பெயர் உள்ளிட்ட விபரங்களை பகிரலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.