ராமநாதபுரம், ஜூன் 3: ராமநாதபுரம் நகராட்சி வள்ளல்பாரி நடுநிலைப் பள்ளி நேற்று திறக்கப்பட்டது. அப்போது கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம், நகராட்சி தலைவர் கார்மேகம் ஆகியோர் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா பாடநூல்கள், கல்வி உபகரணங்களை வழங்க பள்ளி வளாகத்துக்குள் வந்தனர். அப்போது மாணவிகளின் பெற்றோர் சிலர், ‘‘நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பிளஸ் 1ல் சேர வந்த 400 மதிப்பெண்களுக்கு குறைவாக உள்ளவர்களை பள்ளியில் சேர அனுமதிக்கவில்லை. ஆங்கில வழியில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி இல்லாததால் இப்பள்ளியில் சேர்க்கை மறுக்கின்றனர்’’ என முறையிட்டனர்.
அப்போது அவர்கள் பெற்றோர்களை அழைத்து போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லை. புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிந்துவிடும். தற்போது ஆங்கில வழியில் படித்த மாணவிகள் பிளஸ் 1ல் தமிழ் வழியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். அதனையடுத்து ஆங்கில வழி தொடங்குவதற்கு அரசின் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை மாணவிகள் இங்கு படிக்கட்டும் என ஆறுதலாக தெரிவித்தனர்.