கிருஷ்ணராயபுரம்; ஜூன்.11: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (33). தரகம்பட்டி தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர். இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பின் தனது பைக்கில் லாலாப்பேட்டைக்கு புறப்பட்டார். கிருஷ்ணராயபுரம் அருகே திருக்காம்புலியூர் பகுதியில் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி படையப்பா (26) என்பவர் ஓட்டி வந்த லாரி எந்த ஒரு முகப்பு விளக்கு எரிய விடாமல் சாலையில் நிறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. மணிமாறன் லாரி மீது பைக் மோதி படுகாயம் அடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் மணிமாறனை மீட்டு கரூர் அரசு மருத்துவம் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் மணிமாறன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தள்ளனர். புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். மணிமாறனுக்கு மனைவி மற்றும் 7 வயதில் ஒரு குழந்தையும், 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர்.