தோகைமலை, மார்ச் 6: தோகைமலை மேற்கு ஒன்றிய திமுக சார்பாக 10 ஊராட்சிகளில் நடந்த விளையாட்டுப்போட்டிகளில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்டம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனைப்படி தோகைமலை மேற்கு ஒன்றிய திமுக சார்பாக 10 ஊராட்சிகளில் விளையாட்டுப்போட்டிகள், அன்னதானம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் தனித்தனியாக நடந்தது. சின்னையம்பாளையம், கழுகூர், நாகனூர், பொருந்தலூர், தோகைமலை, பாதிரிப்பட்டி, பில்லூர், கல்லடை, கூடலூர், கள்ளை ஆகிய 10 ஊராட்சிகளில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னாள் எம்எல்ஏ மற்றும் தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ராமர் தலைமை வகித்து கட்சி கொடி ஏற்றி விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.
இதில் ஊராட்சி அளவிலான 100 மீட்டர் ஓட்டம், பாட்டிலில் நீர் நிரப்புதல், சைக்கிள் மிதவேகம், மியூசிக் சேர், கயிறு இழுத்தல், பானை உடைத்தல் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் ஆண்களுக்கும், 100 மீட்டர் ஓட்டம், பாட்டிலில் நீர் நிரப்புதல், மியூசிக் சேர், மியூசின் பால் மற்றும் கயிறு இழுத்தல் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் பெண்களுக்கும் என தனித்தனியாக நடந்தது. பின்னர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிவர்களுக்கு முதல் பரிசு ரூ.400, 2வது பரிசு ரூ.300, 3வது பரிசு ரூ.200 என அனைத்து போட்டிகளுக்கும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. இதேபோல் பாட்டிலில் நீர் நிரப்புதல், சைக்கிள் மிதவேகம், மியூசிக் சேர் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் முதல் பரிசு தலா ரூ.400, 2வது பரிசாக ரூ.300, 3வது பரிசாக ரூ.200 என்று ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. கயிறு இழுத்தல் போட்டிக்கு ரூ.1000 மற்றும் பானை உடைத்தல் போட்டிக்கு ரூ.400 என்று ரொக்கப்பரிசுகள் வழங்கபட்டது.
அனைத்து போட்டிகளிலும் முதல் பரிசு பெற்ற நபர்களை தேர்வு செய்து வருகிற 22ம் தேதி கரூரில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கு நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2வது பரிசு 7 ஆயிரத்து 500, 3வது பரிசாக ரூ.5 ஆயிரம் வீதம் ரொக்கப்பணம் வழங்கப்பட உள்ளது. போட்டிகளிலும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர். இதேபோல் பொதுமக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேட்டி, சேலை, மரக்கன்றுகள், மாணவர்களுக்கு நோட்டுகள் வழங்கப்பட்டது. தோகைமலை மேற்கு ஒன்றிய திமுக மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய துணை செயலாளர்கள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் திமுக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்பட பொதுமக்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.