புதுக்கோட்டை,ஆக.14: புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி ஈட்டிதெரு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வகுப்பறை கட்டிடம் தொடர்ந்து சிதலமடைந்து காணப்பட்ட நிலையில் மேற்புற சுவர் இடிந்து விழுந்ததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி அருகே உள்ள ஈட்டி தெரு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 150 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியின் 7ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவ மாணவிகள் பயிலும் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் சூழலில் அது சிதலமடைந்து விரிசல்கள் விழுந்து காணப்பட்டதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தியும் அந்த பகுதியைச் சேர்ந்த பெற்றோர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து வந்துள்ளனர். ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பள்ளி வகுப்பறை கட்டடத்தில் மேற்புற சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்பு சம்பந்தப்பட்ட பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தங்களிடம் தற்போது புதிய கட்டடம் கட்ட நிதி இல்லை எனக் கூறி சென்று விட்டதாகவும் இதனால் தங்களது குழந்தைகளை இந்த பள்ளிக்கு அனுப்புவதற்கு அச்சமாக உள்ளது எனவும் அதுமட்டுமின்றி 150 மாணவ மாணவிகள் இப்பள்ளியில் பயிலும் சூழலில் அவர்களுக்கான வகுப்பறை கட்டட வசதியின் இல்லை எனவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடையே 150 மாணவ மாணவிகளுக்கான போதிய பள்ளி கட்டடம் இல்லாததால் 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளி கட்டட வரண்டாவில் அமர்ந்து கல்வி கற்கும் காட்சி வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:
தொடர்ந்து புகார் அளித்து வந்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதன் விளைவுதான் தற்போது பள்ளி கட்டடத்தின் மேற்புற சுவர் இடிந்து விழுந்ததற்கு காரணம் என்றும் அதன் பின்பு கூட அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது வேதனையாக உள்ளது என்றும் தங்களது குழந்தைகளை பாதுகாப்பற்ற சூழலில் பள்ளிக்கு அனுப்புவது தங்களுக்கு அச்சமாக உள்ளது என்றும் உடனடியாக கல்வித்துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து புதிய பள்ளி கட்டடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.