மதுரை, ஆக. 22: தொழில் முனைவோராக விரும்புவோர் மதி சிறகுகள் தொழில் மையத்தின் மூலம் தேவையான சேவைகளை பெறலாம் என கலெக்டர் கூறியுள்ளார்.
மதுரை கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கை: வாழ்ந்து கட்டுவோம் திட்டம் தமிழ்நாட்டில் 3994 கிராமங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பெண்களின் வாழ்க்கையை தொழில் ஊக்குவிப்பு மூலம் சுயசார்புள்ள சமூகங்களாக உருவாக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஓரிட சேவை மையமான ‘மதி சிறகுகள் தொழில் மையம்’ ஊரக தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இந்த மையங்கள் தொழில் முனைவோர் – தொழில் நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், அரசு துறை திட்டங்கள் மற்றும் வங்கிகளில் இருந்து கடன் பெறுவதற்கான வணிகத்திட்டம் தயாரித்தல், தொழில் நடத்துவதற்கான சான்றிதழ்கள், பதிவு மற்றும் இணக்கம் பெறுதல், திட்ட மற்றும் துறை சார்ந்த நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதல் ஆதரவு, சந்தைப்படுத்துதல், பிராண்டிங் ஆதரவு போன்ற பல்வேறு வணிக மேம்பாட்டு ஆதரவு சேவைகளை வழங்குகிறது. மேலும், இ-சேவை மற்றும் ஜிஎஸ்டி சேவைகளை வழங்குகிறது. தொழில் முனைவோராக ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தற்போது தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் மிகக்குறைந்த செலவில் மதி சிறகுகள் தொழில் மையங்கலிருந்து பல்வேறு சேவைகளைப் பெறலாம்.
இதன் வாயிலாக சுய உதவிகுழு உறுப்பினர்கள் தங்கள் தொழில்களை நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி நோக்கி கொண்டு செல்லலாம். இந்த மையங்களின் செயல்பாடுகளை நிறுவன மேம்பாட்டு அலுவலர், நிதி அலுவலர் ஆகியோர் நிர்வகிப்பர், தொழில் சார்ந்த நிபுணர்கள் தொழில் முனைவோரின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வார்கள். இந்த சேவைகளைப்பெற, உங்களுக்கு அருகில் உள்ள மதி சிறகுகள் தொழில் மையம் மற்றும் 98650 14280, 96004 63744 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளாம். இவ்வாறு கூறியுள்ளார்.