நாகர்கோவில், ஆக. 17 : தொழில் முதலீட்டு கழகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு நிதிக் கழகம் ஆகும். தமிழ்நாடு அரசு நிறுவனமான இந்நிறுவனம் 1949ம் ஆண்டு துவங்கப் பெற்று மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.
நாகர்கோவில் கேப் ரோட்டில் வேப்பமூடு ஜங்சன் அருகில் உள்ள கிளை அலுவலகத்தில் சிறப்பு குறு சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில்களுக்கான சிறப்பு கடன் முகாம் வருகிற 19ம் தேதி (திங்கட்கிழமை) முதல் 06.09.2024 (வெள்ளிக்கிழமை) வரை அலுவலக வேலை நாட்களில் நடைபெற உள்ளது.
இக்கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. இக்கால கட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீதம் சிறப்பு சலுகை அளிக்கப்படும். தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியமாக ரூ.150 லட்சங்கள் வரையும், உற்பத்திச் சார்ந்த குறுந்தொழில்களுக்கு தமிழக அரசின் மூலதன மானியமாக 25 விழுக்காடும் கூடுதல் மானியமாக 10 விழுக்காடும் மற்றும் மகளிர் தொழில் முனைவோருக்கு 5 விழுக்காடும் சிறப்பு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
23.08.2024 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள ரோட்டரி கம்யூனிட்டி சென்டரில் நடைபெற உள்ள சிறப்பு கருத்தரங்கில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு சிறப்பு உரை ஆற்ற உள்ளார். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பொது மேலாளர் துரைராஜ் தொழில் முனைவோருக்கு சிறப்பு ஆலோசனை வழங்க உள்ளார். இந்த அரிய வாய்பினை தொழில்முனைவோர் பயன்படுத்தி கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.