திருப்புத்தூர், ஜூன் 11: தொழில்முனைவோர் புத்தாக்க சான்றிதழ் படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட திட்ட மேலாளர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், அகமதாபாத் இ.டி.ஐ.ஐ. உடன் இணைந்து கடந்தாண்டு முதல் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் படிப்பை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த படிப்பை பயின்று வருகின்றனர். தொழில் முனைவோராக ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதில் சேர 21 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள், ஐ.டி.ஐ.யில் தொழிற்கல்வி பயிற்சி முடித்தவர்கள் தகுதி உடையவர்கள் ஆவர்.
புதுப்பித்த பாடத்திட்டம், நவீன வசதிகளுடன் கூடிய நூலகங்கள், அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்கள், ஸ்மார்ட் மற்றும் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள் ஆகியவை இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் ஆகும். இதில் சேரும் மாணவர்கள் பல்வேறு மாநில அரசு நிறுவனங்களுக்கு சென்று தொழில் முனைவோருக்கு தேவையான அத்தியாவசிய வணிக திறன்கள் மற்றும் அறிவை வளர்த்துக் கொள்ளலாம். கல்வி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு வங்கி கடன் வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இது தொடர்பான கூடுதல் தகவல்களை www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் அல்லது 8668101638 / 8668107552 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும். இந்த தகவலை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன சிவகங்கை மாவட்ட திட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.