செய்யாறு, மே 12: செய்யாறு அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் நகை, ரூ.1.50 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர். செய்யாறு அடுத்த அப்துல்லாபுரம் மகாவீர் நகரை சேர்ந்தவர் முருகேசன்(59). இவர் தூசி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கேண்டனில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி, மூத்த மகளுடன் சொந்த ஊரான தஞ்சாவூர் அடுத்த மானவரங்குடி கிராமத்தில் உள்ள அம்மன் கோயில் விழாவிற்காக கடந்த 7ம் தேதி சென்றிருந்தார். அதே கிராமத்தில் உள்ள இரண்டாவது மகள் கோபிகா தினமும் வந்து லைட் போட்டுவிட்டு கோழிகளுக்கு தீவனம் போட்டு வந்தார்.
அதேபோல், நேற்று காலை 9.30 மணி அளவில் கோபிகா வந்தபோது வீட்டின் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து தந்தைக்கு தகவல் கொடுத்தார். மாலை வீடு திரும்பிய அவர்கள் வீட்டில் சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த 3 சவரன் நகைகளும், ஒரு லட்சத்து ஐந்தாயிரம் பணமும் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து முருகேசன் தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.