தண்டராம்பட்டு, ஆக. 21: தண்டராம்பட்டு அருகே பட்டப்பகலில் கூலித்தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் சுதா(35). இவருடைய கணவர் சேகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சுதா கூலி வேலைக்காக நேற்று திருவண்ணாமலைக்கு சென்று விட்டார். கல்லூரியில் படிக்கும் மூத்த மகள் காவியா சான்றுகள் வாங்குவதற்காக திருவண்ணாமலையில் உள்ள அரசு அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அதேபகுதியில் 8ம் வகுப்பு படிக்கும் இளைய மகள் திரிஷா மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 6 சவரன் தங்க நகைகள், ₹5000 ரொக்க பணம், 200 கிராம் வெள்ளி கால் கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திரிஷா உறவினரான வீரபத்திரனிடம் கூறினார். வீரபத்திரன் உடனடியாக தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பார்வையிட்டு கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் தங்க நகைளை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.