புதுச்சேரி, மே 29: கேரளாவை சேர்ந்த தொழிலாளியை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மிதுன்டாஸ் (32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 26ம் தேதி மிதுன்டாஸ் மாகே பிராந்தியம் பள்ளூரில் இரட்டை பிலாக்கோல் சோக்லி- பரல் மெயின் ரோட்டில் உள்ள மதுக்கடைக்கு சென்றுள்ளார்.
பின்னர், அங்கு மதுஅருந்தி விட்டு வெளியே வந்தபோது அஜேஷ், ஜினீஷ் மற்றும் பெயர் தெரியாத நபர் ஆகியோர் இணைந்து மிதுன்டாசை திடீரென சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்களாம். உடனே அக்கம், பக்கத்தினர் காயமடைந்த மிதுன்டாசை மீட்டு சிகிச்சைக்காக பள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் அவர், பள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அஜேஷ் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.