ஆரணி, ஜூலை 2: கண்ணமங்கலம் அடுத்த புதுப்பாளையம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் பரமகுரு(34), இவர், ஆரணி அடுத்த சேவூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். கடந்த 27ம் தேதி பரமகுரு வழக்கம்போல், வேலைக்கு வந்து பங்கில் வேலைசெய்து கொண்டிருந்துள்ளார். அப்போது, சேவூர் பகுதியை சேர்ந்த ஆகாஸ்(22) மற்றும் அவரது நண்பர் சந்தோஷ்(24), இருவரும் பைக்கில் பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளனர். அப்போது, ஆகாஸ் பைக்கிற்கு ரூ.30க்கு பெட்ரோல் போட்டுள்ளார். பின்னர், பணம் கொடுக்காமல் சென்றுள்ளார்.
இதனால், பரமகுரு பெட்ரோல் போட்டதற்கு பணம் கொடுத்துவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டள்ளது. இதில், ஆத்திரமடைந்த ஆகாஸ் அவரது நண்பர் சந்தோஷ் இருவரும் சேர்ந்து பரமகுருவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினர். இதில், படுகாயமடைந்த பரமகுருவை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, ஆரணி தாலுகா போலீசில் பரமகுரு நேற்று கொடுத்த புகாரின் பேரில் போலீசார், தலைமறைவாக இருந்த ஆகாஸ், சந்தோஷ் இருவரையும் நேற்று கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.