ஆரணி, ஜூன் 5: ஆரணி அருகே தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பூசிமலைகுப்பம் ஊராட்சி அருந்ததிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு(68), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. இவருடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் 4 பேர் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால், சேட்டு ரேஷன் கடையில் அரிசி எடைபோடும் வேலை மற்றும் கூலி வேலைகள் செய்து, அதேபகுதியில் தனியாக வசித்து வந்தார். பூசிமலைகுப்பத்தில் உள்ள செல்லியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு தேர் திருவிழா நடந்தது. அப்போது, திருவிழாவிற்கு சேட்டு சென்று பார்த்துவிட்டு, மீண்டும் விடு திரும்பினார். அப்போது, வீட்டில் உணவு சாப்பிட்டுவிட்டு, அவரது வீட்டின்வாசலில் கட்டிலில் துங்கி உள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது கட்டிலுக்கு அருகில் முகம் மற்றும் தலையில் பலத்த ரத்த காயங்களுடன் சேட்டு சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, மர்ம ஆசாமிகள் சேட்டுவை கட்டை மற்றும் கல்லால் சரமாரியாக அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ஆரணி டிஎஸ்பி (பொறுப்பு) தீபக்ரஜினி திருவண்ணாமலை ரூரல் டிஎஸ்பி ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், திருவண்ணாமலையில் இருந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர். இதில், முதற்கட்ட விசாரணையில் சேட்டுவிற்கும் அதேபகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக, ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், தகாத உறவை இடையில் கைவிட்டிருந்ததும் தெரியவந்தது. பின்னர், நேற்று முன்தினம் நடந்த தேர் திருவிழாவில் மீண்டும் இவர்களுக்கு இடையே தகாத உறவு ஏற்பட்டு, அதுதொடர்பாக இக்கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து, ஆரணி தாலுகா போலீசார் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கொலையில் சந்தேகத்தின் பேரில், முன்னாள் ராணுவ வீரர் அவரது மகளை போலீசார் காவல்நிலையம் அழைத்து வந்து அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், டிஎஸ்பி மற்றும் தாலுகா இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகள் யார்? சேட்டு கொலையில் வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.