கோவை, ஜூன் 26: சிவகங்கையை சேர்ந்தவர் நாகபாண்டியன் (28). இவர், கோவை சுந்தராபுரம் பகுதியில் தங்கிருந்து பெட்டிகடையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதுக்கரை மார்க்கெட் ரோடு டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றார்.
அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து தான் பெரிய ரவுடி என கூறி பணம் கேட்டார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்றார். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் பாக்கெட்டில் வைத்திருந்த பிளேடை எடுத்து நாகபாண்டியன் கழுத்தில் வைத்து மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாகபாண்டியன் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து நாகபாண்டியன் சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், நாகபாண்டியனிடம் ரவுடி என மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்தது போத்தனூர் கணேசபுரம் பகுதியை சேர்ந்த தமிழரசன் (25) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.