விருதுநகர், ஆக.30: தொழிலாளியை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருத்தங்கல் வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் மாரிமுத்து(31). அச்சகத்தில் வேலை செய்து வருகிறார். இவரது நண்பரும் சிவகாசி டவுன் காவல் நிலைய முதல்நிலை காவலருமான கூடலிங்கம், பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அதிலும் மாரிமுத்து கூலி வேலையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பட்டாசு ஆலையில் வேலை செய்த கூலித்தொகை ரூ.10 ஆயிரத்தை தருமாறு கூடலிங்கத்திற்கு போன் செய்து மாரிமுத்து கேட்டுள்ளார். அதற்கு கூடலிங்கம் நேரில் வந்து பெற்று செல்லும்படி கூறி உள்ளார்.
அதை நம்பி மாரிமுத்து சேர்வைக்காரன்பட்டியில் உள்ள செல்லயாரம்மாள் கோவில் அருகில் சென்று கூடலிங்கத்திடம் பணம் கேட்டுள்ளார். உடனே மாரிமுத்துவை தரக்குறைவாக திட்டி கம்பால் தாக்கி உள்ளார். சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மாரிமுத்து ஆமத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் கூடலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் கூறுகையில், கூடலிங்கம் கடந்த மார்ச் மாதம் முதல் வேலைக்கு செல்லாமல் ஆப்செண்ட்டில் இருப்பதாக தெரிவித்தனர்.