கண்டமங்கலம், ஜன. 4: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்த பக்கிரி பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (43) கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பார்த்திபனின் இருசக்கர மோட்டார் சைக்கிள் கடந்த சில மாதங்களுக்கு முன் காணவில்லை. இந்த ஆண்டு முதல்நாள் புதியதாக மோட்டார் சைக்கிள் வாங்கி வந்து வீட்டின் எதிரே நிறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு வாகனத்தை யாரோ திருடி சென்று விட்டனர். இந்தாண்டு புதிய வண்டியை யார்? திருடுகிறார்கள் என்று பார்க்கலாம் என பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற பிரகாஷ் யாரை பார்த்து பேசுகிறாய் என பார்த்திபனை பார்த்து கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் ரவி, புருஷோத்தமன் ஆகியோர் மறைத்து வைத்திருந்த பிளேடால் பார்த்திபனின் கழுத்தில் கிழித்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்திபனை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனை அவசர பிரிவில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து புகாரின் பேரில் பிரகாஷ், ரவி, புருஷோத்தமன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து பிரகாஷை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரவி, புருஷோத்தமனை போலீசார் தேடி வருகின்றனர். முன் விரோத தகராறில் தொழிலாளி கழுத்தை பிளேடால் கிழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.