ஈரோடு, ஜூன் 5: பகுதி நேர வேலை என்ற பெயரில் முதலீடு செய்ய வைத்து தொழிலாளியிடம் ரூ.12.71 லட்சம் ஆன்லைன் மூலம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கதிரம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி நந்தகுமார் (30). இவரை, பகுதி நேர வேலை செய்வதற்காக ஆப்பில் தொடர்பு கொண்ட நபர்கள், பின்னர் டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். தொடர்ந்து, டெலிகிராம் மூலம் லிங்க் ஒன்றை அனுப்பி, அதனை அந்த நபர்கள் கிளிக் செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.
அதில் சில பொருட்களை கிளிக் செய்யும் வகையில், எளிமையான டாஸ்க்குகளை வழங்கியுள்ளனர். அவர்கள் வழங்கிய டாஸ்க்குகளை முடித்தவுடன் முதலீடு செய்த பணம், நந்தகுமாருக்கு இரட்டிப்பாக கிடைத்துள்ளது. இந்த ஆசையின் காரணமாக, பல்வேறு கட்ட தவணைகளாக ரூ. 12.71 லட்சத்தை, நந்தகுமார் முதலீடு செய்திருக்கிறார். அத்தொகையை அந்நபர்கள் வழங்கிய வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அதற்கு இரட்டிப்பு பணமும் வரவில்லை. அவர் முதலீடு செய்த பணமும் கிடைக்கவில்லை. அதன் பின்னரே நந்தகுமார் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறார்.
அதனைத்தொடர்ந்து, நந்தகுமார் அளித்த புகாரின் பேரில், ஈரோடு சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மோசடி செய்யப்பட்ட பணம் ரூ.12.71 லட்சம், கிருஷணகிரி மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு சென்றிருப்பது தெரியவந்தது. மேலும், மோசடி நபர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி சண்முகம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி அலுவலக உதவியாளர் சுதாகர் மற்றும் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட மற்றொரு சண்முகம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, மோசடியில் ஈடுபட்ட சண்முகம் மற்றும் சுதாகரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள மற்றொரு சண்முகம் மற்றும் இன்னும் சில நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், மோசடிக்கு உடந்தையாக இருந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த பாலாஜி (26) என்பவரை, சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சண்முகத்தை தேடி வருகின்றனர்.