Sunday, June 22, 2025
Home மாவட்டம்ஈரோடு தொழிலாளர் நலத் துறை சார்பில் 4 ஆண்டுகளில் ரூ.53.50 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்: 67 ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயனடைந்தனர்

தொழிலாளர் நலத் துறை சார்பில் 4 ஆண்டுகளில் ரூ.53.50 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்: 67 ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயனடைந்தனர்

by Neethimaan

ஈரோடு,மே20: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம்,தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியம் உட்பட 20 நலவாரியங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் நலத் திட்டத்தின் அட்டவணையில் பட்டியலிடப்பட்ட தொழில் இனங்களான கல் உடைப்பவர், கொத்தனார்,தச்சர்,பெயிண்டர்,கம்பி வளைப்பவர்,பிட்டர்,மெக்கானிக் உள்ளிட்ட 54 வகையான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் ஓட்டுநர், தையல், ஓவியர், பனைமரத் தொழில், சலவைத் தொழில், முடிதிருத்தும் தொழில் உள்ளிட்ட 60 வகையான தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 20 வகையான தொழிலாளர்கள் நலவாரியங்களில் கடந்த 7 – 5 – 2021 முதல் 6 – 5 – 2025 வரையிலான 4 ஆண்டு காலத்தில் 59,679 தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களாக புதிதாக பதிவு செய்துள்ளனர். தற்போது வரையில், ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 412 தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து, நலத்திட்ட உதவித் தொகைகளை பெற்று வருகின்றனர். இதில், தொழிலாளர் நலத் துறையில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, விபத்து மரண நிவாரணத் தொகை, பணியிடத்து விபத்து மரண நிவாரணத் தொகை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பதிவு பெற்ற, 60 வயது நிறைவடைந்த தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிந்துள்ள 3,835 தொழிலாளர்களும், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் 6,843 தொழிலாளர்களும் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர்கள் நலவாரியத்தில் 559 தொழிலாளர்களும் என மொத்தம் 11,237 அமைப்புசாரா தொழிலாளர்கள் மாதந்தோறும் ரூ.1,200 வீதம் ஓய்வூதியமாகவும் மற்றும் குடும்ப ஓய்வூதியமாக 9 பேர் மாதம் ரூ. 500 வீதம் பெற்று வருகின்றனர்.
கடந்த 7 – 5 – 2021 முதல் 6 – 5 – 2025 வரை, 20 நலவாரியங்களிலும், பதிவு செய்துள்ள 57,485 தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்கான உதவித் தொகையாக ரூ. 12 கோடியே 43 லட்சத்து 10 ஆயிரத்து 150 மதிப்பிலும், திருமண உதவித்தொகையாக 1,141 நபர்களுக்கு ரூ. 1 கோடியே 56 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலும், 34 பெண் தொழிலாளர்களின் மகப்பேறு உதவித்தொகையாக ரூ.1 லட்சத்து 59 ஆயிரமும், கண் கண்ணாடிக்கான உதவித் தொகையாக 110 பேருக்கு ரூ.68,500 மதிப்பிலும்,

பதிவு பெற்ற தொழிலாளர்கள் 60 வயது நிறைவடைந்தவுடன் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 1,200 பெறுவதற்கு 7,616 நபர்களுக்கு ரூ. 33 கோடியே 81 லட்சத்து 31 ஆயிரத்து 772 மதிப்பிலும், மாதாந்திர குடும்ப ஓய்வூதியமாக 9 நபர்களுக்கு ரூ.67,500 மதிப்பிலும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான நிவாரண உதவித்தொகையாக 1,017 நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 கோடியே 80 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பிலும், விபத்து மரணமடைந்த 34 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.51 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலும், விபத்தில் ஊனமுற்ற 1 தொழிலாளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலும், பணியிடத்து விபத்து மரணமடைந்த 27 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடியே 35 லட்சம் மதிப்பிலும் தமிழ்நாடு அரசால் அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக நலன்கருதி, உயர்த்தி வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவித்தொகைகளின்படி மொத்தம் 67,481 நபர்களுக்கு ரூ. 53 கோடியே 50 லட்சத்து 29 ஆயிரத்து 922 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்கள் மற்றும் திருநங்கைகள் சொந்தமாக புதிய ஆட்டோ வாகனம், தொழில் முறை டாக்சி வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்தில் பதிவுபெற்ற 6 பெண் ஓட்டுநர்களுக்கு சொந்தமாக வாகனம் வாங்குவதற்கு மானியமாக ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 6 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பதிவு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் உரிய அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போது, ஊக்க உதவித்தொகையாக தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு ரூ. 25 ஆயிரமும், பன்னாட்டளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பதிவு பெற்ற 3 அமைப்புசாரா தொழிலாளர்களின் குழந்தைகள் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றதற்காக ஊக்க உதவித் தொகையாக தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 75 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi