வேலூர், செப்.3: சிலிண்டர் விநியோகிக்கும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 41 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலூர் தொழிலாளர் இணை ஆணையர் புனிதவதி அறிவுரையின்படி ஆகஸ்ட் மாதத்தில் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) வரதராஜன் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுடன் திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1948ம் வருட குறைந்தபட்ச பட்ச ஊதிய சட்டத்தின்கீழ் 41 நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் ஆய்வின் போது தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது வழக்குகள் தொடரப்படும் என்று வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.