கடலூர், ஆக. 3: கடலூர் முதுநகர் அருகே உள்ள சிப்காட்டில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நேற்று மதியம் பச்சையாங்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையின் அருகே உள்ள ஒரு திறந்த வெளி பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த கடலூர் சிப்காட் தீயணைப்பு நிலை அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, அங்கு திறந்தவெளி பகுதியில் இருந்த காய்ந்த சருகுகள் மற்றும் குப்பைகள் தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் நேற்று வெயில் அதிகமாக இருந்த காரணத்தால் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.