திருவொற்றியூர், நவ. 10: திருவொற்றியூரில் தொழிற்சாலைக்குள் முளைத்த விஷக் காளானை சமைத்து சாப்பிட்டதில் தாய், 2 மகன்களுக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டுள்ளது. மூவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பவன்சர்மா. இவரது மனைவி மணிதா தேவி(29). மகன்கள் ராஜ்வீர்(12), சூரியராஜ்(11). இதில் மணிதா தேவி திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். தொழிற்சாலை அருகிலேயே மணிதா தேவி தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். அந்த தொழிற்சாலைக்குள் ஆங்காங்கே விஷ காளான்கள் முளைத்துள்ளன. ஆனால் அந்த காளான்களை சாதாரண வகை காளான் என்றும், அவைகளை பறித்து வீட்டில் சமைக்கலாம் என்றும் மணிதா தேவி நினைத்திருக்கிறார்.
அதன்படி நேற்று முன்தினம் அந்த காளான்களை பறித்து அவர் தனது வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார். பின்னர் அந்த காளான்களை வீட்டில் சமைத்த மணிதாதேவி, தனது மகன்களுடன் சேர்ந்து காளானை சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டவுடன் உடல் நலம் பாதிக்கப்பட்டு 3 பேருக்கும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த அவர்களை உடனடியாக அருகில் இருந்தவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் மேல் சிகிச்சைக்காக 3 பேரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷ காளான்களை சாப்பிட்டு தாய், மகன்கள் பாதிக்கப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.