விராலிமலை, ஜூன் 11: தொழிற்சாலைகள் நிறைந்த விராலிமலைக்கு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என தொழில்துறையினர், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தின், கடைகோடி பகுதியான விராலிமலை, சென்னை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வரும் விராலிமலை ஊராட்சியாக இருந்து வந்த நிலையில் தற்போது தரம் உயர்த்தி பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.விராலிமலையை பொருத்தவரை டிவிஎஸ், ஐடிசி, சன்மார், எஸ்ஆர்எப்,ரானே இஞ்சின், ஹரிஹர் அலாய்ஸ், ரானே பவர் ஸ்டேயரிங், சென்வியான், எம்.எம்.எம் போரிஜிங்ஸ், விண்ட் மில் காத்தாடி தயாரிப்பு நிறுவனம் என்று கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் சிறிய, பெரிய நிறுவனம் என்று 100 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்ற. இதை தவிர கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை, பழைய கழிவு பொருட்களை வாங்கும் வணிக நிறுவனங்கள் ஆங்காங்கே உள்ளது. இதில், உள்ளூர் மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகள் மட்டுமல்லாது வடஇந்தியாவை சேர்ந்த ஆயிரக்காணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், பகல், இரவு என்று தினம்தோறும் மூன்று ஷிப்ட்கள் பணிகள் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. தொழிற்சாலைகளில் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தீ விபத்து உள்ளிட்ட தொழிலாளர்கள் ஏதேனும் அசம்பாவிதத்தில் சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்க 13 கிலோ மீட்டர் தூரமுள்ள இலுப்பூர் அல்லது 14 கிலோ மீட்டரில் இருக்கும் மணப்பாறையில் இருந்து தான் தீ அணைக்கும் வாகனம், மீட்பு படையினர் வரவேண்டும் என்ற நிலை உள்ளது. இதுகுறித்து, அப்போதைய ஆட்சியில் அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கரிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு அப்பகுதிகளில் நிலவி வருகிறது. தற்போது விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ வாக விஜயபாஸ்கர் உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் 5 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற போதும் விராலிமலையில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட எம். பழனியப்பனை விட 23 ஆயிரத்து 598 வாக்குகள் அதிகம் பெற்று விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். இதனால், திமுகவினர் மத்தியில் சுணக்கம் தென்படுகிறது. இருப்பினும் ஆட்சி பொறுப்பில் இருக்கும் திமுக தலைமையிலான தமிழக அரசு அதிமுக ஆட்சியில் செய்ய மறந்த விராலிமலையின் அடிப்படை தேவையான தீயணைப்பு நிலையத்தை அமைத்து தரவேண்டும் என்பதே தொழிலாளர்கள், பொதுமக்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.