நல்லம்பள்ளி, செப்.2: கிருஷ்ணகிரியில் இருந்து கரித்தூள் ஏற்றிய லாரி ஒன்று, சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை திருவண்ணாமலை மாவட்டம், தனிப்பாடியை சேர்ந்த அருள் (43) ஓட்டி வந்தார். நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று மதியம் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் தாறுமாறாக ஓடி, தொப்பூர் கணவாய் அருகே தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டிரைவர் இடுபாடுகளில் சிக்கிக்கொண்டார். தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்க சாவடி பணியாளர்கள், இடுபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த டிரைவரை மீட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் லாரியை மீட்டனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.