தொண்டி, அக்.21: தொண்டி கடற்கரை பகுதியில் பொழுது போக்கிற்கு வசதியாக பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி பகுதி மாவட்டத்தில் நீளமான கடல் கரையை கொண்டதாகும். வரலாற்று சிறப்புமிக்க இவ்வூருக்கு தினமும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பொழுது போக்கிற்கு உள்ள ஒரே இடம் இந்த கடற்கரை பகுதி மட்டுமே.
ஆனால் கடற்கரை பகுதியில் எவ்வித வசதியும் இல்லாததால் உள்ளூர் வாசிகளும் சுற்றுலா பயணிகளும் அதிருப்தியுடன் செல்கின்றனர். மேலும் உள்ளூர் பொது மக்களும் மாலை நேரங்களில் பொழுது போக்கிற்கு செல்லும் போது அமர்வதற்கு இருக்கை கூட கிடையாது. அதனால் பொதுமக்களின் நலன் கருதி பொழுது போக்கு பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து தமுமுக செயலாளர் மைதீன் கூறுகையில், தொண்டியில் பொழுது போக்கு அம்சம் எதுவும் இல்லாததால் இப்பகுதி மக்கள் ராமநாதபுரம் அரியமான் பீச் உள்ளிட்ட பகுதிக்கு அதிக பொருட்செலவு செய்து செல்கின்றனர். தொண்டி கடற்கரையில் பொழுது போக்கு பூங்கா அமைக்க வேண்டும். கடற்கரை பகுதியில் அமர்வதற்கு இருக்கைகள் அமைத்தால் வசதியாக இருக்கும் என்றார்.