தொண்டி, ஜூன் 18: தொண்டி செக்போஸ்ட் அருகே வண்ணான் குளம் பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் இருந்ததால், தற்போது ஜமாத் சார்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தொண்டி செக்போஸ்ட் அருகில் உள்ள வண்ணான்குளம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு குளிப்பது உள்ளிட்ட பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்தது. குளம் முழுவதும் தாமரை செடிகள் வளர்ந்ததால், எவ்வித பயன்பாடும் இல்லாமல் இருந்து வருகிறது. இக்குளத்தை தூர்வாரக் கோரி பேரூராட்சியில் பலமுறை மனு கொடுத்தும் பயன் இல்லாததால் தொண்டி தெற்கு தெரு ஜமாத் சார்பில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது தண்ணீர் வெளியேற்றப்பட்டு தூர் வாரப்பட்டு வருகிறது. ஜமாத் நிர்வாகிகள் கூறியது, மக்களின் பயன்பாட்டில் இருந்த குளம் ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கலப்பு, தாமரை செடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பயன்பாடில்லாமல் சில வருடங்களாக இருந்தது. தொண்டி தெற்கு தெரு ஜமாத் சார்பில் தற்போது தூர்வாரப்பட்டு கரைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது என்றனர்.