தொட்டியம், ஜூலை 10: தொட்டியம் அருகே நத்தத்தில் வீட்டில் புகுந்து 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.10,000 திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள நத்தம் அக்ரஹாரத் தெருவை சேர்ந்த செல்லதுரை மனைவி சுமதி (45). இதில் செல்லதுரை கடந்த ஏழு ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி சுமதி விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சரவணீஸ்வரன் என்ற மகனம், சுப்ரஜா என்ற மகளும் உள்ளனர். இதில் சுமதி தனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்றுமுன்தினம் மாலை குளித்தலை சென்று விட்டதாக தெரிய வருகிறது. வீட்டில் சுமதியின் மகள் மற்றும் மகன் மட்டும் தனியாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்து வீட்டினுள் புகுந்து அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 5 பவுன் தங்க ஆரம் மற்றும் கல் வைத்த நெக்லஸ் மூன்றரை பவுன் மற்றும் மோதிரம்ஒரு பவுன் மற்றும் கால் பவுன் மோதிரம், முக்கால் பவுன் தோடு என மொத்தம் பத்தரை பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.10,000 பணம் ஆகியவற்றை திருடிகொண்டு வீட்டின் பின்புறம் வழியாக வெளியே சென்று தப்பியுள்ளார். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ஆதார் கார்டு மற்றும் பல்வேறு கார்டுகளையும் அதை வைத்திருந்த பைகளையும் தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இச் சம்பவம் குறித்து அறிந்த காட்டுப்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில் குமார் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.