ஊட்டி, அக். 4: ஊட்டி தொட்டபெட்டாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு சுற்றித்திரியும் குரங்குகளுக்கு உணவு வழங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேணடும் என கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரில் இருந்து 8 கிமீ தொலைவில் கோத்தகிரி செல்லும் சாலையில் அடர்ந்த வனத்திற்கு நடுவே தொட்டபெட்டா சிகரம் அமைந்துள்ளது. தமிழகத்தின் உயர்ந்த சிகரமாக விளங்கும் தொட்டபெட்டாவிற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
தொட்டபெட்டாவை சுற்றிலும் உள்ள வனங்களில புலி, சிறுத்தை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. இதுதவிர குரங்குகளும் அதிகளவு உள்ளன. இந்நிலையில், தொட்டபெட்டா சிகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு சுற்றித்திரியும் குரங்குகளுக்கு தாங்கள் கொண்டு வரும் தின்பண்டங்களை வழங்குகின்றன. இவற்றை சாப்பிட்டு பழக்கப்பட்ட குரங்குகள் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்கிறது.
மேலும், குரங்குகளுக்கு தின்பண்டங்கள் வழங்குவதால் அவை வனங்களுக்குள் சென்று உணவு தேடுவதை மறந்து இயற்கையோடு ஒன்றி வாழ முடியாத நிலை மற்றும் அவற்றிற்கு உடல் ரீதியான பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. எனவே, தொட்டபெட்டா வரும் சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு உணவளிப்பதை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுப்பதுடன் எச்சரிக்கை பலகைகளையும் வைக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.