திருவள்ளூர், ஆக. 17: திருவள்ளுர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் தொடுகாடு ஊராட்சியில் அனுமதியின்றியும், வரி செலுத்தாமலும் பல ஆண்டுகளாக 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு, அரசுக்கு ₹34 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் விசாரணையில், வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்களைக் கண்டறிந்து அதன் மீது மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தொடுகாடு ஊராட்சியில் பல ஆண்டுகளாக அனுமதியின்றி செயல்பட்டு அரசுக்கு வரி ஏய்ப்பு செய்து வந்த விகேபி இன்ஜினியரிங், எஸ்ஆர் ப்ரொபைல், கணேஷ் ஐடி டேக், ஜேஆர்சி கன்ஸ்ட்ரக்சன், தக்சன் எக்ஸ்போர்ட் ஆகிய 5 நிறுவனங்கள் கண்டறியப்பட்டன. அதன் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஏ.மணிசேகர் தலைமையிலான அதிகாரிகள் எஸ்ஆர் ப்ரொபைல், விகேபி இன்ஜினியரிங், கணேஷ் ஐ டேக் ஆகிய 3 நிறுவனங்களுக்கு அதிரடியாக சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் 2 நிறுவனங்கள் டிடிசிபி அலுவலகத்தில் அனுமதி பெற்ற ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த நிறுவனங்களுக்கு சீல் வைப்பது நிறுத்தி வைக்கப்பட்டதாக ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஏ.மணிசேகர் தெரிவித்தார்.
தொடுகாடு ஊராட்சியில் பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த 3 நிறுவனங்களுக்கு சீல்
previous post