மாமல்லபுரம்,அக்.2: ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இதனால், பழைய கலங்கரை விளக்க பகுதி களைகட்டியது. ஞாயிறு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்நாட்டு பயணிகள் கார், வேன், தனியார் பஸ்களில் குடும்பத்தோடு ஏராளமானோர் வந்தனர். இவர்கள், வருகையால் மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய தெருக்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டை பாறை, அர்ஜூணன் தபசு, ஐந்து ரதம் மற்றும் கடற்கரை கோயில், பழைய கலங்கரை விளக்கம் ஆகியவற்றை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர். மேலும், ஒத்தவாடை தெரு, கிழக்கு ராாஜவீதி, தென்மாட வீதி ஆகிய தெருக்களில் சாலையை மறித்து, வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், போக்குவரத்தை சீர் செய்ய போலீசார் யாரும் வராததால் உள்ளூர் மக்களே நீண்ட நேரம் போராடி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், பழைய கலங்கரை விளக்கத்தை சுற்றிப் பார்க்க வந்த பயணிகள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று கண்டு ரசித்தனர்.