கோவை, ஜூன் 20: கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் 90 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றில் இருந்து இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் நிலையில், குளம் நிரம்பிய பின்னர் உபரி நீர் மீண்டும் நொய்யல் ஆற்றுக்கு செல்லும். இதனிடையே தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நொய்யல் ஆற்று நீர் ஆத்துப்பாலம் அருகே உள்ள வெள்ளலூர் தடுப்பணையில் இருந்து, வெள்ளலூர் குளத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெள்ளலூர் குளத்தில் நீர் இருப்பு படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில், நேற்று அதிகாலையில் முழு கொள்ளளவை எட்டியது. குளம் நிரம்பி இருப்பதால் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குளத்தின் நீர்வழிப்பாதையில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக மேற்கொண்டதால் வெள்ளலூர் குளம் நிரம்பி இருப்பதாகவும், இதனால் 10 கி.மீ. வரை உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.