மதுக்கரை, மே 26: கோவை மதுக்கரை ஒன்றியம் பிச்சனூர் ஊராட்சிக்குட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் அங்குள்ள மக்களுக்கு இலவச தொகுப்பு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. அந்த வீடுகளில் வசிக்கும் பயனாளிகள் சரிவர பராமரிக்காமல் விட்டதால், தற்போது வீடுகள் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அங்குள்ள தொகுப்பு வீட்டில் வசிக்கும் வயது முதிர்ந்த தம்பதிகளான ரங்கன் (90), ராசம்மாள் (85) ஆகியோர் உறங்கி கொண்டு இருந்தபோது தொடர் மழையின் காரணமாக நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் திடீரென வீட்டின் சுவர் இடிந்து, கூரையும் இடிந்து விழுந்தது.
இதில் சிறு காயங்களுடன் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொடர்ந்து வீடு விழுந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரங்கன் மற்றும் ராசம்மாள் தம்பதியினரை வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாவட்ட போலீஸ் எஸ்.பி கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர். அவர்களுடன் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், மாநகர செயலாளர் கார்த்திக் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.