தர்மபுரி, செப்.3: தொடர் மழை காரணமாக, பழைய தர்மபுரி அருகே விவசாய பணிகள் துவங்கி உள்ளது. தர்மபுரி மாவட்ட விவசாயத்தில் நெல், கரும்பு, மஞ்சள் ஆகியவை முக்கிய சாகுபடியாக திகழ்கிறது. நெல் பயிர் செய்வதில் அனைத்து விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியங்களில் நெல் சாகுபடி 24 ஆயிரம் பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தர்மபுரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தர்மபுரியில் 20 மி.மீ, பென்னாகரத்தில் 72 மி.மீ, பாலக்கோட்டில் 12.4 மி.மீ, பாப்பிரெட்டிபட்டியில் 29 மி.மீ, அரூரில் 12 மி.மீ, மாரண்டஅள்ளியில் 10 மி.மீ, ஒகேனக்கல்லில் 67 மி.மீ, மொரப்பூரில் 16 மி.மீ, நல்லம்பள்ளியில் 42 மி.மீ என மொத்தம் 280.8 மி.மீ மழை பெய்துள்ளது.
தர்மபுரி அருகே, பழையதர்மபுரி பகுதியில், நேற்று நெல் நடவுக்காக நிலத்தை டிராக்டர் மூலம் உழவு செய்யும் பணியும், பல இடங்களில் நாற்றுக்களை நடவு செய்யும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் தென்மேற்கு பருமழை வெகுவாக குறைந்து விட்டது. வடகிழக்கு பருவமழையாவது கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில், நெல் நடவு செய்ய உழவு பணியை மேற்கொண்டுள்ளோம். பழைய தர்மபுரியில் சுமார் 200 ஏக்கர் அளவிற்கு நெல் பயிரிடப்படுகிறது. பருவமழை போதிய அளவிற்கு பெய்தால், எதிர்பார்த்த அளவிற்கு மகசூல் கிடைக்கும்,’ என்றனர்.