ஊட்டி, ஜூலை 7: தொடர் மழையால் காட்டேரி அணை முழுமையாக நிரம்பி, ரம்மியமாக காட்சி அளிக்கிறது.நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி அணை உள்ளது. இந்த அணையை அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. காட்டேரி அணையில் இருந்து தண்ணீரை ராட்சத குழாய்கள் மூலம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பருவ மழையின்போது காட்டேரி அணை நிரம்பி உபரிநீர் வெளியேறுவதுண்டு.
இந்தாண்டு ஜூன் மாதம் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே மே மாதத்திலேயே துவங்கியதை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக நீலகிரியில் தொடர் மழை பெய்து வருகிறது. கேத்தி பாலாடா, காட்டேரி டேம் போன்ற பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்றுடன் அதி கனமழையும் பெய்வதால் காட்டேரி அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்து அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர், காட்டேரி நீர் வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்நிரம்பிய அணை ரம்மியமாக காட்சி அளிப்பதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.