திருவண்ணாமலை, மே 18: திருவண்ணாமலையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 19 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை பகுதியில் பைக் திருட்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கிரிவலப்பாதை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், மாடவீதி உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்படும் பைக்குகள் அதிக அளவில் திருடுபோகின்றன. இந்நிலையில், நேற்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இருசக்கர வாகன விற்பனை ஷோரூம் எதிரில் நிறுத்தியிருந்த பைக்கை திருட முயன்றதாக அங்கிருந்தவர்கள், 3 வாலிபர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அதைத்தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், போளூர் அல்லிநகர் பகுதியை சேர்ந்த மோகன் மகன் அர்ச்சுனன்(35), ஆனந்தன் மகன் பிரபு(33), கொண்டம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சந்தோஷ்(32) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் 3 பேரும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, அர்ச்சுனன் உட்பட 3 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் பல்வேறு இடங்களில் திருடி பதுக்கி வைத்திருந்த 19 பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார், 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது 19 பைக்குகள் பறிமுதல் திருவண்ணாமலையில்
71