ஈரோடு, ஆக. 27: ஈரோடு மாவட்டத்தில் தொடர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக நடப்பாண்டில் இதுவரை 38 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக தொடர் திருட்டு, வழிப்பறி, அடிதடி, கொலை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களான மது, தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்களையும் போலீசார் சிறையில் அடைத்து, அவர்கள் சிறையில் இருந்து வெளியே வர இயலாத படி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைத்து வருகின்றனர்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தி ஆகிய 5 போலீஸ் சப் டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதியில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்பி ஜவகர் பரிந்துரையின்பேரில், மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார். இதில், ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் தற்போது வரை தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 38 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில், 2 பேர் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2023ம் ஆண்டில் 33 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்திற்குள்ளேயே 38 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.