உடுமலை, ஜூலை 7: அமராவதி அணை நீர்மட்டம் தொடர்ந்து 3 வாரங்களாக முழு கொள்ளளவில் உள்ளது. உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது.தவிர, நூற்றுக்கணக்கான கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இந்த அணையில் 4.04 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையும், வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர்வரத்து இருக்கும். இந்த ஆண்டு மே கடைசி வாரம் பெய்ய துவங்கிய தென்மேற்கு பருவமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, படிப்படியாக நீர்மட்டம் உயர்ந்தது.அணையின் நீர்மட்டம் கடந்த ஜூன் 17ம் தேதி 88 அடியை எட்டியதால் உபரிநீர் ஆற்றிலும், பிரதான கால்வாயிலும் திறந்து விடப்பட்டது.
அணையில் நேற்று நீர்மட்டம் 88.75 அடியாக இருந்தது. அணைக்கு 627 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 460 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த 3 வாரங்களாக அணை நீர்மட்டம் முழு கொள்ளளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.