நாகர்கோவில், ஜூன் 24: தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையின்படி அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் தகுதி பெற்று மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பணி நாடுநர்களின் தற்காலிக பட்டியல் பெறப்பட்டுள்ளது. 2346 இடைநிலை ஆசிரியர் இடம்பெற்றுள்ளனர். அவ்வாறு பெறப்பட்ட பணி நாடுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிடும் வரை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) அளவில் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் ‘எமிஸ்’ இணையதளம் வாயிலாக ஆன்லைன் கலந்தாய்வு மூலம் பணி நியமன ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட உள்ளது.
பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரிய கடிதத்தின்படி பெறப்பட்ட தற்காலிக தெரிவு பட்டியல் தேர்வர்கள் அளித்துள்ள வீட்டு முகவரியின் அடிப்படையில் வருவாய் மாவட்ட அளவில் பட்டியல் கண்டறியப்பட்டது.
தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை பள்ளி மற்றும் மலை சுழற்சி பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி, நல்லொழுக்கம் கற்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள உள்ள தெரிவு பெற்ற நபர்கள் அரசு பணியில் சேருவதற்கு முன்பு குற்றச்செயலில் ஈடுபட்டு குற்ற வழக்குகளில் தண்டனை அல்லது குற்ற வழக்கு ஏதும் நிலுவையில் உள்ளதா என்பதை பணி நியமனத்திற்கு முன்பு ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.
எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 2346 பணி நாடுநர்களின் வீட்டு முகவரியுடன் கூடிய மாவட்ட வாரியான பட்டியல் அந்தந்த வருவாய் மாவட்ட தலைநகரில் உள்ள மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பப்படுகிறது. இப்பட்டியல் பெறும் பணி நாடுநர்களின் விபரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பி தெரிவு பெற்ற பணி நாடுநர்கள் மீது எவ்விதமான குற்ற வழக்கும்‘‘ நிலுவையில் உள்ளதா என மந்தண முறையில் அறிக்கை பெற்று கோப்பில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
அவ்வாறு மாவட்ட கல்வி அலுவலரால் தெரிவு பெற்ற பணி நாடுநர்கள் மீது குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது என மந்தண அறிக்கை பெறப்பட்டால் உடனடியாக அந்நபருக்கு பணி நியமனம் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் அந்நபரின் குற்ற வழக்கு நிலுவை குறித்த விவரம் உடனடியாக இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.