வலங்கைமான், ஜூலை 17: தொகுப்பூதியம் பெற்று ஓய்வு பெற்ற அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.7,850- வழங்க வேண்டும் என்று வலங்கைமானில் நடந்த ஓய்வூதியர் சங்க வட்ட பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க வட்ட பேரவை கூட்டம் வட்டத் தலைவர் புஷ்பநாதன் தலைமையில் நடைபெற்றது. ஜெயராமன் வரவேற்றார். வேலை அறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கையை படித்து ஊழியர்களிடம் வட்ட செயலாளர் சண்முகம் ஒப்புதல் பெறப்பட்டது. வட்ட பேரவையை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் ராஜசேகரன் துவக்கி வைத்து பேசினார்.
மாவட்ட செயலாளர் முனியன், மாவட்டஇணைச் செயலாளர் புவனேஸ்வரி, அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் பிரேமா தலைமை ஆசிரியர் செல்லையன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சித்ரா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வட்டதலைவர் பாலசுந்தரம் ஆகியோர் வாழ்த்தினர்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயதில் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெற்று ஓய்வு பெற்ற அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் வட்ட இணைச் செயலாளர் கலையரசி நன்றி கூறினார்.