Tuesday, September 17, 2024
Home » தையல் தொழில் தொடங்கலாம்… நிரந்தர வருமானம் பார்க்கலாம்!

தையல் தொழில் தொடங்கலாம்… நிரந்தர வருமானம் பார்க்கலாம்!

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழிசிறு தொழில்ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க ஓர் இடம் ஆகியவைதான் அத்தியாவசியத் தேவைகள். இதில், இரண்டாவது இடத்தைப் பெறுவது உடை. இந்த உடை என்பது தேவைக்கு மட்டுமின்றி நம் தோற்றத்தை உயர்த்திக் காட்டவும் செய்கிறது. எனவேதான் ஆள் பாதி, ஆடை பாதி என நம் முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள். இன்றைய நவநாகரிக உலகில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே என பல்வேறு வடிவங்களில் உடைகள் தயாரிக்கப்படுகின்றன. அன்றைய காலங்களில் பண்டிகை, திருவிழா உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் மட்டுமே புத்தாடை என்பது தேவைப்பட்டது. ஆனால், இன்றைய காலத்தில் சுபநிகழ்ச்சிகள் மட்டுமல்லாது அன்பளிப்பு, தள்ளுபடி காலங்கள், சீருடைகள், வேலைக்குச் செல்ல என்பதுபோன்ற பல்வேறு காரணங்களால் ஆடைகளின் தேவையும் விற்பனையும் அதிகரித்து வருகின்றன. எனவே, ஆடைகளின் தேவையை மையமாக வைத்து அது சார்ந்த தொழிலான தையல் தொழிலை முறையாக திட்டமிட்டு செய்தால் நல்லதொரு வருமானத்தை ஈட்ட முடியும் என்கிறார் சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஜானகி ஜெயசேகர். இவர் ‘அபிராமி டெய்லரிங்’ என்ற பெயரில் பயிற்சி மையம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். பெண்களுக்கு மட்டும் பெண்களைக் கொண்டு பயிற்சி வகுப்பு நடத்தி வரும் இவர் தையல் தொழில் குறித்து பல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். ‘‘வீட்டிலிருக்கும் பெண்களுக்கு மட்டும்தான் என்றில்லாமல் இன்றைக்கு அனைத்து துறைகளில் இருக்கும் பெண்களுக்கும் தையல் பயிற்சி என்பது அவசியமாகியுள்ளது. அதனால் அனைத்துத் துறையைச் சேர்ந்தவர்களும் இன்றைக்கு தையல் கற்று வருகின்றனர். ஆடைகளை உற்பத்தி செய்ய ஜவுளி ஆலைகள் அமைப்பதற்கோ, ஷோரூம்கள் அமைப்பதற்கோ பெரிய அளவிலான முதலீடு தேவைப்படும். ஆனால், தையல் தொழிலை தொடங்குவதற்கு அதிக  முதலீடு  தேவையில்லை. முறையாகக் கற்றுக்கொண்டு சிறிய முதலீட்டில் துவங்கி படிப்படியாக வளர்ச்சி பெறலாம். அதுதான் முதல் தலைமுறை பெண் தொழில்முனைவோருக்கு நல்லது.ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் ஆடை தைத்துத் தருவோரை விட குறிப்பிட்ட  தரப்பினருக்கு மட்டும் தைத்துத் தரும் டெய்லர்கள் அதிகம் உள்ளனர். அனைத்துத் தரப்பினருக்கும் தைத்துத் தர அதிக அனுபவம் தேவை. அதனால் ஆண்களின் ஆடைகளை தைக்கும் டெய்லர், பெண்களின் ஆடைகளைத் தைக்கும் டெய்லர் போன்றவர்களை இணைத்து தையல் தொழிலைச் செய்தால் அதனை ஒரு நிறுவனமாக வளர்த்தெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். எனது அபிராமி டெய்லரிங் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் பெண்களுக்கு மட்டுமே உள்ள அனைத்துவிதமான ஆடைகள் வடிவமைப்பையும் கற்றுக்கொடுக்கிறேன். அத்துடன் டிப்ளமோ பயிற்சி, ஃபேஷன் டிசைனிங் மற்றும் தையல் ஆசிரியைப் பயிற்சியும் அளித்து வருகிறேன். தேவைப்படுபவர்கள் 9444629404 என்ற எண்ணில் தொடர்புகொண்டால் ஆலோசனைகள் வழங்கப்படும்.தையல் தொழிலை முக்கியப் பகுதியில் கடைகளை வாடகைக்குப் பிடித்துத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆரம்ப காலத்தில் வீட்டிலேயே ஒன்றிரண்டு இயந்திரங்களை வாங்கி வைத்தும் செய்யலாம். தனியாகவோ, உதவிக்கு ஆட்களை வேலைக்கு அமர்த்தியோ கூடுதல் தையல் இயந்திரங்களை வாங்கி வைத்துச் செய்யலாம்.நாம் செய்யும் தையல் வேலையை பிறருக்குத் தெரியப்படுத்த வேண்டியதுதான் முக்கியம். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க பின்னர் படிப்படியாக இடவசதிக்கேற்ப விரிவாக்கி கொள்ளலாம். பின்னர் வேறு இடங்களுக்கோ, முக்கியப் பகுதிகளுக்கோ மாற்றி பெரிய நிறுவனமாகக்கூட அமைத்துக் கொள்ளலாம்.என்னதான் ரெடிமேட் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டாலும், அனைவருக்குமே அது பொருந்திவிடுவதில்லை. துணியாக எடுத்துத் தைப்பவர்களின் எண்ணிக்கை எப்போதும் போலவே இப்போதும் உள்ளது. எனவே தையல் தொழிலுக்கான வாய்ப்பு என்பது எப்போதும் உண்டு.பண்டிகைக் காலங்கள் வந்து விட்டால் தையல்காரர்கள் பிசியாகிவிடுவது வழக்கம். பள்ளிகள், செக்யூரிட்டி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சீருடைகள் அவசியம் என்பதால் அவர்களுக்கு சீருடை தைத்துத்தரும் வாய்ப்புகளும் உள்ளன. இதுபோன்ற நிறுவனங்களுக்குச் சென்று மொத்தமாக ஆர்டர்கள் கேட்கலாம்.ஜவுளிக்கடைகள் அதிகம் உள்ள பகுதிகளிலோ, குறிப்பிட்ட ஜவுளிக்கடைகள் உள்ள பகுதிகளிலோ விளம்பரம் செய்து உடனடியாக தைத்துக் கொடுக்கப்படுவதும் உண்டு. அது போன்ற பகுதிகளில் கடைகள் அமைத்து தைத்துக்கொடுக்கும் பணிகளில் ஈடுபடலாம்.போதிய தையல் ஆட்கள் கைவசம் இருக்க வேண்டியது அதிகளவு ஆர்டர்களின்போது அவசியம். இல்லாவிட்டால் தைத்துக் கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு ஆர்டர்கள் கைநழுவிச் செல்லும் வாய்ப்புண்டு. தையல் தொழிலில் ஈடுபடுவோர் பல்வேறு விவரங்களையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும். தையல் தொழில் செய்யும் பிற தையல் கலைஞர்களை தெரிந்து வைத்துக்கொண்டு அவர்களோடும் நல்லுறவு கொண்டிருக்க வேண்டும்.அப்போது தான் மொத்த ஆர்டர்கள் அதிகளவில் வரும்போது, நம்மிடம் பணியாற்றும் தையற் கலைஞர்களால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாத நிலை இருந்தாலும் நட்புறவு கொண்டுள்ள தையற் கலைஞர்களிடம் கொடுத்து ஆர்டர்களை முடித்துத் தரலாம். இதனால் அவருக்கும் தொழில் வாய்ப்பு கிடைக்கும். இதற்கு கமிஷனாக குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொள்ளலாம்.அதுபோல் துணி வகைகள்,  நூல் வகைகள் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக வாங்கும் கடைகளையும் அறிந்து வைத்திருப்பது நல்லது. பள்ளிகள் போன்றவற்றுக்கு சீருடைகள் தைத்துத்தரும் ஆர்டர்கள் கிடைக்கும் நிலையில், அதற்கான துணிகளை மொத்தமாக வாங்கினால் தான் குறைந்த விலைக்கு தைத்துத்தர முடியும். விலையை அதிகம் வைத்து தைத்தால், குறைந்த விலை கேட்கும் வேறொருவருக்கு ஆர்டர் போய்விடும். இல்லாவிட்டால் கணிசமான அளவிற்கு வருவாய் குறையும். காலத்திற்கேற்ப மாறிவரும் ஆடை வடிவமைப்புகளை தெரிந்துகொள்ள வேண்டும்.காலத்திற்கேற்ற வடிவமைப்புகளில் தைத்துத்தரும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். புதுவித டிசைன்களையும் அறிந்து அதற்கேற்ப தயாரிக்கும் தொழில்நுட்பத்தை புகுத்த முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப செய்து தர முடியும். வாடிக்கையாளர்களும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். தையல் பயிற்சிகள் இன்றைக்கு பல்வேறு இடங்களிலும் வழங்கப்படுகிறது. அங்கு தையல் கலையை கற்று சிறியளவில் தையல் பணியைத் துவங்கலாம்.இயந்திரம் வாங்கி வைத்துக்கொண்டு வீட்டிலிருந்தே முதலில் செய்யத் துவங்கலாம். அல்லது ஏதேனும் டெய்லரிங் கடைகளில் பணிக்குச் சேர்ந்தும் பணிபுரியத் தொடங்கலாம். இவ்வாறு பணியாற்றும்போது இத்துறை சார்ந்த பல்வேறு விவரங்களும், அனுபவங்களும் கிடைக்கும். வேலைவாய்ப்பு குறைந்துவரும் சூழலில், வீட்டுச் சூழலின் காரணமாக வெளியில் வேலைக்குச் செல்ல முடியாதவர்கள் என அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் ஒரு நிரந்தரமான வருமானத்தைத் தரக்கூடிய தொழில்தான் தையல்தொழில் என்பதில் சந்தேகமே இல்லை. சுயதொழில் செய்வோம், சுதந்திரமாக வாழ பொருளாதாரத்தைப் பெருக்குவோம்’’ என்ற நம்பிக்கை வார்த்தையுடன் முடித்தார் ஜானகி ஜெயசேகர். சமீபத்தில் இவர்  புதுதில்லியில், பத்திரிகை சம்மேளனம் நடத்திய விழாவில் தொழில் சாதனையாளர் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!தோ.திருத்துவராஜ்

You may also like

Leave a Comment

fourteen − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi