Wednesday, May 22, 2024
Home » தேவை கொஞ்சம் அன்பும் கவனிப்பும்!

தேவை கொஞ்சம் அன்பும் கவனிப்பும்!

by kannappan

நன்றி குங்குமம் தோழிமனித உயிரை உருவாக்கித் தரும் பெண்ணின் கருப்பை எவ்வளவு முக்கியமானது என்பதை பெண்ணுடலில் ஒவ்வொரு காலகட்டத்திலும்  நடக்கும் பருவ நிலை மாற்றங்கள் நமக்கு உணர்த்துகின்றன. பெண்ணின் உடல் பூப்பெய் திய பின்னர் அவளுடலில் குழந்தைமை மெல்ல  நிறம் மாறும் அழகினை உணர முடியும். அவளது கரு முட்டைகள் வெளியாகத் துவங்கும் பருவத்தில் தன் இணையை ஈர்ப்பதற்கான மாற்றங்களை அவளது ஹார்மோன்கள் அள்ளித்தருகின்றன. அடுத்தடுத்து குழந்தைப் பேறு அவளுடலின் வலிமையை அதிகரிக்கச்  செய்கிறது. பெண்ணுடலில் கருமுட்டை வெளியாவது நிற்பதை நாம் மெனோபாஸ் என்கிறோம். பெண்ணுடல் தன் உயிர் உற்பத்திக்கான  பருவத்தை தாண்டும் போது உடல், மனம் இரண்டிலும் அவளறியாமல் பல போராட்டங்கள் நடக்கிறது. தனக்குள் ஏற்படும் மாற்றங்களை  அவளே புரிந்து கொள்ள முடியாமல் வாழ்வில் பல்வேறு சங்கடங்களை சந்திக்கிறாள். இன்றைய காலகட்டத்தில் பூப்பெய்தும் வயதைப் போலவே மெனோபாஸ் வயதும் குறைந்து வருகிறது. பெண்ணின் 50 வயதில்  எட்டிப்  பார்த்த மெனோபாஸ் 40 வயதிலிருந்தே இன்றைய பெண்களுக்கு நிகழ்கிறது. இது எதனால்? இதன் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் குறித்துப்  பேசுகிறார் கர்ப்பவியல் மற்றும் மகப்பேறு நிபுணர் டாக்டர் பத்மபிரியா. ‘‘மாதவிடாய் சுழற்சி முடிவுக்கு வந்திருப்பதை மெனோபாஸ்  என்கிறோம். மாதவிடாய் இல்லாமல் 12 மாத காலம் கடந்த பிறகு மெனோபாஸ் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது. மெனோபாஸ்  ஏற்படுவதற்கான சராசரி வயது 51. இதற்கான அறிகுறிகள் உடலில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே துவங்கிவிடும். இது  இயற்கையானது தான் என்றாலும் இது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. காய்ச்சல் போன்ற ஒரு வெப்பநிலை உணர்வை உடலில் ஏற்படுத்துகிறது. தூக்கத்தை பாதிக்கும். உடல் சக்தியிழப்பது போலத் தோன்றும்.  உணர்வு ரீதியிலான ஆரோக்கியத்தையும் பாதிக்கும். பிரீமெனோபாஸ் அறிகுறிகளை முதலில் தெரிந்து கொள்வோம். ஒழுங்கற்ற  மாதவிடாய், பிறப்புறுப்பில் உலர்வுத்தன்மை, உடலில் காய்ச்சல் போன்ற வெப்ப உணர்வு, குளிரடிப்பதாய் உணர்தல், இரவில் வியர்த்தல்,  தூங்குவதில் பிரச்னைகள், மனநிலை மாற்றங்கள், எடை அதிகரிப்பு, மெதுவான வளர்சிதை மாற்றங்கள், முடி உதிர்வு, மெலிதல் மற்றும்  உலர் சருமம், மார்பக முழுமை உணர்விழப்பு என இந்த அறிகுறி கள் பெண்ணுக்குப் பெண் மாறுபடும். பிரீமெனோபாஸ் காலக் கட்டத்தில்  மாதவிடாய் முறையாக ஏற்படுவது மற்றும் தவறுவதும் வழக்கமானதே. ஒருசில நாட்களில் ஒரு மாதம் மாதவிடாய் தள்ளிப்போகலாம். திரும்ப வரலாம் அல்லது பல மாதங்கள் வராமலும் இருக்கலாம். மீண்டும் மாதவிடாய் சாதாரண நிலைக்கு வரலாம். மாதவிடாய்  சுழற்சியின் கால அளவு குறைவானதாகவும் இக்காலகட்டத்தில் இருக்கலாம். இனப்பெருக்க ஹார் மோன்கள் சுரப்பது இயற்கை யாகக்  குறைவது, கருப்பை நீக்கம், புற்றுநோய்க்கான சிகிச்சையாக ஹீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை, 40 வயதுக்கு முன்னரே  கருமுட்டையகத்தின் இயல்பான செயல்பாடு நின்றுவிடுதல் ஆகிய காரணங்களால் இது போன்ற மாற்றங்கள் பெண்ணுடலில் ஏற்படுகிறது.  மெனோபாசுக்குப் பின்னர் சில பாதிப்புகளையும், இடர்களையும் பெண்ணுடல் சந்திக்கிறது. இதயம் மற்றும் ரத்தநாள நோய்கள்பெண்ணுடலில் ஈஸ்ட்ரோஜென் அளவுகள் குறையும் பொழுது இதய ரத்த நாள நோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. பெண்களின்  உயிரிழப்புக்கான முக்கிய காரணமாக இதயநோய் உள்ளது. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை, சரியான உடல்  எடைப்பராமரிப்பு, கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்தல் அவசியம். கொழுப்பளவு மற்றும் ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாக  இருந்தால் அதனை எப்படிக் குறைப்பதென்று உங்களது மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.  எலும்புப் புரை நோய்இந்நோயால் எலும்புகள் பலவீன மடையும். எலும்புகள் எளிதில் நொறுங்கி உடைய வாய்ப்புண்டு. எலும்புப்புரை பாதிப்புள்ள, மாதவிடாய்  நின்றுவிட்ட பெண்களுக்கு அவர்களது முதுகுத்தண்டு, இடுப்பெலும்புகள் மற்றும் மணிக்கட்டுகளில் எலும்பு முறிவுகள் ஏற்பட வாய்ப்புகள்  அதிகம். சிறுநீர் கழிப்பதைக் கட்டுப்படுத்தும் திறன் இழப்புஉங்களது பிறப்புறுப்பு மற்றும் சிறுநீர் வடிகுழாயின் திசுக்கள் நெகிழ்வுத் தன்மையை இழப்பதால் சிறுநீர் கழிப்பதைக் கட்டுப்படுத்தும் திறன்  குறையும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என உணர்வது, திடீரென  தீவிரமான உணர்வும், அழுத் தமும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத்  தொடர்ந்து கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் தானாகவே வெளியேறவும் வாய்ப்புள்ளது. சிரிக்கும் போதும் பொருட்களைத் தூக்கும் போதும்  சிறுநீர் கசிவு ஏற்படலாம். இவர்கள் கெஜல் (kegels) உடற்பயிற்சியின் மூலம் இடுப்பெலும்பு, தசைகளை வலுப்படுத்துவது மற்றும் பெண்  பிறப்புறுப்பில் ஈஸ்ட்ரோஜனை பயன்படுத்துவதனால் சிறுநீர் கழிப்பதை அடக்க முடியாத நிலைக்கான அறிகுறிகளிலிருந்து நிவாரணமளிக்க  உதவும். உடல் எடை அதிகரிப்புமாதவிடாய் நிற்பதற்கு முன்பான காலகட்டம் மற்றும் மெனோபாஸ் ஏற்பட்டதற்குப் பிறகும் வளர்சிதை மாற்ற செயல்பாட்டின் வேகம்  குறைவதால் பல பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்புப் பிரச்னை உள்ளது. இக்காலக்கட்டத்தில் உணவைக் குறைத்து உடற்பயிற்சியை  அதிகரிக்கச் செய்ய வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பெண்ணுடலில் நோய் கண்டறிய FSH மற்றும் ஈஸ்ட்ரோஜென்  TSH ஆகிய  பரிசோதனைகள் உதவும். சிகிச்சை முறைகள்1. ஹார்மோன் சிகிச்சை, காய்ச்சல் போன்ற வெப்ப உணர்வு அறிகுறியிலிருந்து நிவாரணம் பெற அதிக வாய்ப்புள்ள சிகிச்சையாக  ஈஸ்ட்ரோஜென் சிகிச்சையைச் சொல்லலாம். எலும்பு வலுவிழப்பைத் தடுக்க ஈஸ்ட்ரோஜன் உதவுகிறது. ஹார்மோன் சிகிச்சைகள் நீண்ட காலத்துக்கு பரிந்துரைக் கப்படுவதில்லை. ஆனால் மெனோபாஸ் காலகட்டத்தில் ஹார்மோன் சிகிச்சையைத் தொடங்குவது  பெண்களுக்கு பலனளிக்கிறது. 2. பெண்ணின் பிறப்புறுப்பில் ஈஸ்ட்ரோஜன் பயன்பாட்டினால் அந்த இடம் உலர்வதைத் தடுக்க உதவும். 3. குறைந்த திறன் அளவில் உளச்சோர்வைப் போக்கும் மருந்துகள் காய்ச்சல் போன்ற உணர்வினை சமாளிக்க உதவும். 4. காய்ச்சல் போன்ற வெப்ப உணர்வுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரைகள் எடுக்கலாம். 5. வைட்டமின் டி துணைப்பொருட்கள், எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. வாழ்க்கை முறையில் கடைப்பிடிக்க வேண்டிய மாற்றங்கள்* போதுமான நேரம் தூங்குவது*கஃபைன் உள்ள காபி, காரம் அதிகம் உள்ள உணவுகள், மதுபானம், மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். *  கெஜெல்ஸ் உடற்பயிற்சி மூலம் இடுப்பு எலும்புப் பகுதியை வலுப்படுத்தலாம். * சமச்சீர் உணவை எடுத்துக் கொள்வது. * புகைப்பிடிக்காமல் இருப்பது. * தவறாமல் உடற்பயிற்சி செய்வது. மெனோபாஸை நெருங்கிக் கொண்டிருக்கும் பெண்களைக் குடும்பத் தினர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவர்களுக்குத்  தேவையான அன்பும் அரவணைப்பும் அவசியம். அவர்கள் நேரத்துக்குச் சாப்பிட்டார்களா? தூங்கினார்களா என்று அக்கறையுடன்  விசாரிக்கலாம். குடும்பம் அந்தப் பெண் மீது காட்டும் அன்பு அவளை இன்னொரு நம்பிக்கை பயணத்துக்குத் தயார்படுத்தும்.  எல்லோருக்காகவும் உழைக்கும், அன்பு காட்டும் பெண்ணுக்கு மெனோபாஸ் காலகட்டத்தில் தேவை கொஞ்சம் கூடுதல் அன்பும், அவளது  உடல் நலத்தின் மீதான கவனிப்பும்.’’-யாழ் ஸ்ரீதேவி

You may also like

Leave a Comment

7 − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi