கோவை, நவ. 21: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது கோவை மாநகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளிங்கிரி (மதிமுக) கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை கணபதி சத்தி ரோட்டில் இருந்து எப்.சி.ஐ குடோன் செல்லும் சாலை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு, தேவையின்றி எப்.சி.ஐ நிர்வாகத்தினர் அடுத்தடுத்து 8 இடங்களில் வேகத்தடை அமைத்துள்ளனர்.
இது, இருசக்கர வாகன ஓட்டிகளை பதம் பார்க்கும் வகையில் உள்ளது. மிக உயரமான அளவில் உள்ள இந்த வேகத்தையால், உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகளுக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேவையின்றி அமைக்கப்பட்டுள்ள இந்த வேகத்தடைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும். இதேபோல், பீளமேடு பயனியர் மில் ரோடு-அவினாசி ரோடு சந்திப்பில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, ரோட்டில் சாக்கடை நீர் வெளியேறுகிறது.
இதனால், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பெருமளவில் அவதியுறுகின்றனர். இதை சீர்செய்ய வேண்டியது நெடுஞ்சாலை துறையினரின் பணி ஆகும். ஆனால், அவர்கள் அலட்சிய போக்கில் செயல்படுகிறார்கள். இதை சீர்செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் கலை ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜ்குமார் என்பவர் அளித்த மனுவில், ‘‘எங்களின் பள்ளி தலைமை ஆசிரியை விடுப்பு எடுத்து வெளிநாடு சென்றுவிட்டார்.
அதன் பிறகு பொறுப்பு தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் கூடுதல் பொறுப்பேற்று, எங்கள் பள்ளியில் இருந்து அகவிலைப்படி நிலுவைத்தொகை பட்டியலை கடந்த தீபாவளி பண்டிகை முன்பு சமர்ப்பித்துள்ளார். ஆனால், எனக்கு இன்னும் அகவிலைப்படி நிலுவைத்தொகை கிடைக்கவில்லை. எனவே, அகவிலைப்படி அரசாணையை பின்பற்ற தவறிய இணை கருவூலம் (தெற்கு) மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.