மூணாறு, ஆக.27: கேரளா மாநிலம் மூணாறு அருகே உள்ள தேவிகுளம் இறைச்சல்பாறை பகுதியில், இரண்டு வாரங்களுக்கு முன்பு மண் சரிவு ஏற்பட்டது. மேலும் இப்பகுதியில் உள்ள மலைக்குன்றில் 100 மீட்டர் தொலைவுக்கு நீண்ட விரிசல் ஏற்பட்டது. இதனால் நிலச்சரிவு அபாயம் உள்ளதால், இந்த மலையின் கீழ் உள்ள 23 குடியிருப்புவாசிகளை, அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு வருவாய் துறையினர் நோட்டீஸ் அளித்தனர்.
இதில் சிலர் அப்பகுதியை விட்டு வெளியேறினாலும், பெரும்பாலானோர் வெளியேறவில்லை. தற்போது மழை குறைந்து நிவாரண முகாம் அடைக்கப்பட்ட நிலையில் திடீரென பெய்யும் மழையால் அப்பகுதி மக்கள் நிலச்சரிவு பீதியுடன் வசித்து வருவதாக தெரிவித்தனர். மேலும் தேசிய நெடுஞ்சாலை அருகே மண் சரிவு ஏற்பட்ட பகுதியை முழுவதுமாக சீரமைக்க ஒரு மாதத்திற்கும் மேல் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.