சேலம், ஜூலை 9: கூட்டுறவு ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 5,578 விற்பனையாளர், 925 கட்டுநர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு,அவர்களுக்கான நேர்காணல் மாவட்ட வாரியாக உள்ள மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்கள் மூலம் கடந்த டிசம்பரில் நடந்தது. அதன்படி, சேலம் மாவட்ட ரேஷன்கடைகளில் காலியாக உள்ள 236 விற்பனையாளர் பணியிடத்துக்கு 18 ஆயிரம் பேரும், 40 கட்டுநர்கள் பணியிடத்துக்கு 3 ஆயிரம் பேரும் விண்ணப்பித்தனர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு கடந்த டிசம்பரில் அழகாபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் 236 விற்பனையாளர், 40 கட்டுநர் பணிக்கு தேர்வானவர்கள் பெயர் பட்டியல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் இணையதளத்தில் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டுள்ளது. ரேஷன் கடை விற்பனையாளர், கட்டுநர் பணியிடத்துக்கு தேர்வானர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்படவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.