கிருஷ்ணகிரி, ஜூலை 7: கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தல ஆலயத்தில், 52ம் ஆண்டு தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கிருஷ்ணகிரி நகரில் மைய பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தல ஆலயத்தில், 52ம் ஆண்டு தேர்த்திருவிழா நேற்று முன்தினம் மாலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் திருவிழாக் கொடியை, பெங்களூர் புனித பேதுருபாப்பிறை குருத்துவ கல்லூரி பேராசிரியர் சகாயராஜ் ஏற்றி வைத்தார். இதில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆலயத்தில் பங்குதந்தை அருள்ராஜ் முன்னிலையில், நவநாள் ஜெபம் மற்றும் கூட்டுத்திருப்பலி நடத்தப்பட்டது.
தொடர்ந்து 9 நாட்கள் நடக்கும் இந்த தேர்த்திருவிழா நிறைவுநாளின் போது, மாபெரும் வான வேடிக்கையுடன் பாத்திமா அன்னையின் தேர் பவனி கிருஷ்ணகிரி நகர வீதிகளில் உலா வர உள்ளது.