புதுச்சேரி, ஜூலை 1: தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். என்.ஆர். காங்கிரசுக்கு நியமன எம்எல்ஏ தராததால் எங்களுக்கு எந்த வருத்தமும், அதிருப்தியும் இல்லையென முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரி சட்டசபையில் 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக மத்திய அரசால் நியமிக்க முடியும். கடந்த காலங்களில் மாநில அரசு பரிந்துரையின்பேரில் 3 எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டனர். இதுபோன்ற சூழலில் கடந்த நாராயணசாமி ஆட்சியின்போது 3 நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நேரடியாக நியமித்தது. அப்போது ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட எம்எல்ஏக்களை சட்டமன்றத்துக்கு அப்போதைய சபாநாயகர் வைத்திலிங்கம் அனுமதிக்கவில்லை. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது.
ஒன்றிய அரசுக்கு 3 நியமன எம்எல்ஏக்களை நியமிக்க முழு அதிகாரம் உள்ளது. தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு என்ன அதிகாரம் உள்ளதோ? அதே அதிகாரம் உள்ளதாக தீர்ப்பளித்தது. இதையடுத்து சட்டமன்றத்துக்குள் 3 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே 2021ம் ஆண்டு புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ், பாஜ கூட்டணி ஆட்சி அமைந்தது. அப்போதும் ஒன்றிய அரசு நேரடியாக பாஜவை சேர்ந்த வெங்கடேசன், விபி ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோரை எம்எல்ஏக்களாக நியமனம் செய்தது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த என். ஆர் காங்கிரஸ், அதிமுகவுக்கு நியமன எம்எல்ஏ வழங்கப்படவில்லை. அப்போது இது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் திடீரென ராஜினாமா செய்தனர். அவர்களுக்கு பதிலாக பாஜவை சேர்ந்த செல்வம், தீப்பாய்ந்தான், காரைக்கால் ராஜசேகர் எம்எல்ஏக்களாக புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இந்த நியமனத்தின்போது, என்.ஆர். காங்கிரசை சேர்ந்த ஒருவருக்கு ரங்கசாமி நியமன எம்எல்ஏ பதவி கேட்டதாக தகவல் வெளியானது. ஆனால் பாஜ மறுத்து விட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கல்வித்துறை விழாவில் பங்கேற்ற பின்னர் முதல்வர் ரங்கசாமியிடம், நியமன எம்எல்ஏ தாரததால் பாஜ மீது தாங்கள் அதிருப்தியில் உள்ளீர்களா? என கேட்டபோது: பாஜ தான் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு நியமன எம்எல்ஏக்களை நியமித்தார்கள். அவர்களே தற்போது நியமன எம்எல்ஏக்களை நீக்கிவிட்டு, மீண்டும் தங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு எம்எல்ஏ பதவி கொடுத்துள்ளனர். அதில் எங்களுக்கு எந்த அதிருப்தியும், வருத்தமும் இல்லை. நியமன உறுப்பினர் பதவியை பாஜவுக்கு கொடுத்ததற்கு எங்கள் கட்சியை சேர்ந்த யாருக்கும், எந்த கஷ்டமும் கிடையாது. அடுத்த சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தேர்தலை சந்திக்கும் விதமாக கட்சிப்பணியை ஆற்றி வருகிறோம் என்றார்.