சுசீந்திரம், ஆக.24: குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் 490 கோயில்கள் உள்ளன. 2023-24 தமிழக சட்டமன்ற அறிவிப்பின்படி சிறு சிறு கோயில்களில் திருப்பணி நடத்தி கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனடிப்படையில், சுசீந்திரத்தை அடுத்த தேரூர் குறண்டியில் 18 சித்தர்களில் ஒருவரான கோரக்கநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த உபயதாரர்கள் மூலம் ₹40 லட்சத்தில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. மேலும் கூடுதலாக கால பைரவருக்கு ₹10 லட்சம் செலவில் கற்களாலான சன்னதியும், முன் மண்டபம் ₹15 லட்சம் செலவிலும் கட்டப்பட உள்ளது. இதற்கான சிறப்பு பூஜையும், கல் விடும் நிகழ்ச்சியும் குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜேஷ், மராமத்து பொறியாளர் ராஜ்குமார், கோயில் காரியம் கண்ணன், வள்ளலார் பேரவை மாநில தலைவர் பத்மேந்திரா மற்றும் உபயதாரர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.