தேன்கனிக்கோட்டை, மார்ச் 1: தேன்கனிக்கோட்டை அருகே அகலக்கோட்டை -கல்லுப்பாலம் கிராமங்களுக்கு இடையே, மகாதேஸ்வரா சுவாமி கோயில் உள்ளது. இங்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை எருது விடும் விழா நடந்தது. இதில் மொத்தம் 251 காளைகளை கொண்டு வந்தனர். விழாவில் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது, காளையின் கொம்பில் கட்டப்பட்டிருந்த தடுக்குகளை இளைஞர்கள் எடுத்தனர்.
காளைகளை பிடிக்க சென்ற போது முட்டியதில் 12 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எருதாட்டத்தை காண சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, தேன்கனிக்கோட்டை போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.