காரிமங்கலம், ஆக. 12: காரிமங்கலம் அடுத்த திண்டல் பஞ்சாயத்து உடைந்தகரை கிராமத்தில் மின்சாரம் தாக்கியதில் தாய், மகன் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, நேற்று மதியம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது உயிரிழந்தவர்களின் உடலுக்கு, அஞ்சலி செலுத்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். அப்போது அருகில் இருந்த மரத்தில் இருந்த தேன் கூடு கலைந்து, மலை தேனீக்கள் அதிகளவு ஊருக்குள் நுழைந்து துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களை துரத்தி, துரத்தி சென்று கொட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பலரும், அங்கிருந்து ஓட்டம் பிடித்த நிலையில், தேனீக்கள் கொட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து, காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.