வருசநாடு, ஆக. 23: தேனியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரம் உள்ள மயிலாடும்பாறை கிராமத்திற்கு கடந்த 40 ஆண்டுகளாக நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் இந்த வழித்தடத்தில் இரண்டு நகரப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பயன்பாடு அதிகரித்ததுள்ளதால், இந்த வழித்தடத்தில் 6க்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்த பேருந்துகளில் பயணிக்க மகளிருக்கு இலவசம் என்பதால் அதிகமான பெண்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். பொதுவாக இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் பெரும்பாலும் பழுதடைந்த நிலையிலேயே இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் கடைசியாக கடந்த 1997ம் ஆண்டு புதிய பேருந்து இயக்கப்பட்டது.
அதன் பின்னர் இந்த வழித்தடத்தில் பழைய பேருந்துகளே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேனி – மயிலாடும்பாறை வழித்தடத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பேருந்து நேற்று காலை முதல் பயன்பாட்டிற்கு வந்தது. தேனியில் இருந்து மயிலாடும்பாறை நோக்கி சென்ற அந்த அரசு நகரப் பேருந்தை கண்டமனூர் கிராம பொதுமக்கள் பூக்கள் தூவியும் சிறப்பு பூஜைகள் செய்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்று கொண்டாடினர்.